தமிழர் வள ஆலோசனை மையத்தில் யோகாசனப் பயிற்சியின் வரலாறு


நோர்வையின் தலைநகரான ஒஸ்லோவில் உள்ள றொம்மன் என்னும் இடத்தில் தமிழர் வள ஆலோசனை மையத்தினரின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கான கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டது.

தமிழர்களுக்கான ஒரு நிரந்தரக் கட்டடம் இருப்பதால் பல திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தும் சிந்தனைகள் தமிழர் வள ஆலோசனை மையத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. அச்சிந்தனைகளில் ஒன்றாக மூத்தோர் முற்றம் 2003 ஆம் ஆண்டில் உருவகம் பெற்றது. ஒஸ்லோவும் அதைச் சுற்றியும் உள்ள நகரங்களில் வாழும் மூத்தோர்கள், பிரதி புதன்தோறும் தமக்கான ஓர் ஒன்றுகூடும் தளமாக ஆரம்பிக்கப்பட்டதே மூத்தோர் முற்றம் ஆகும். 

2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூத்தோர்களுக்கான யோகாசனப் பயிற்சிகளை வழங்கக்கூடிய ஒரு யோகாசன ஆசிரியர் இனம் காணப்பட்டார். அவர் தான் திரு.ஆறுமுகம் பேரம்பலம் ஐயா அவர்கள். இவர் தமிழ்நாட்டில் புகழ் பூத்த யோகாசன பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பன் அவர்களிடம் முறையாக யோகாசனப் பயிற்சிகள் பெற்று ஆசிரியராக தன்னை உயர்த்திக் கொண்டவர். அவரும் மூத்தோர்களுக்கு யோகாசனத்தை பயிற்றுவிக்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆரம்பித்ததில் இருந்தே மூத்தோர்கள் மத்தியில் யோகாசனப் பயிற்சிகள் மிகவும் பிரபல்யம் அடையத் தொடங்கியது. அக்காலத்தில் யோகாசனம் தொடர்பான பெரிதளவிலான பிரச்சாரங்கள் உலகம் பூராகவும் பரவத் தொடங்கியது. இதனால் யோகாசனத்தை முறையாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உதயமானது. எமது மக்களின் விருப்பத்தை கவனத்தில் கொண்ட தமிழர் வள ஆலோசனை மையத்தினர் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை பிறிதொரு நாளில் திரு.ஆறுமுகம் பேரம்பலம் ஆசிரியரால் ஆரம்பித்து வைத்தனர்.

வாரத்தில் இரண்டு நாட்கள் யோகாசனப் பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்காலப் பகுதியில் யோகாசனப் பயிற்சி ஆசிரியரான பேரம்பலம் ஐயா அவர்கள் தனது வகுப்புகளில் திறமையுடன் செயல்பட்ட இரண்டு நபர்களை தெரிவு செய்து தனக்கு பிற்பட்ட காலத்தில் அவர்களை ஆசிரியராக உருவகப்படுத்துவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். திருமதி.நாமகள் அவர்களும் திரு.ரொபேட் ஜெயானந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் யோகாசனம் மீது கொண்ட ஆர்வத்தாலும் அக்கறையாலும், தமது சொந்தச் செலவில் தமிழகத்திற்கு சென்று யோகாசனப் பயிற்சியை தமக்கு கற்றுத் தந்த ஆசிரியரான திரு.ஆறுமுகம் பேரம்பலம் ஐயா அவர்களின் வழிகாட்டியான யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பன் அவர்களிடம் சிறப்புப் பயிற்சியை பெற்று தம்மை ஆசிரியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். 

2007 ஆம் ஆண்டில் யோகாசன ஆசிரியரான திரு.ஆறுமுகம் பேரம்பலம் அவர்கள் அமரர் ஆனார். அவரது மறைவைத் தொடர்ந்து திருமதி.நாமகள் அவர்களும், திரு.ரொபேட் ஜெயானந்தன் அவர்களும் ஆசிரியர்களாக யோகாசனப் பயிற்சிகளை தொடர்ந்தனர். சிறிது காலத்தின் பின்னர் திருமதி.நாமகள் அம்மா அவர்கள் முதுமை காரணமாக தன்னை விலக்கிக் கொண்டிருந்தார். 

மூத்தோர்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற யோகாசனப் பயிற்சியில் பயன்பெற்ற பலர் இன்று யோகாசன ஆசிரியர்களாக தனிப்பட்ட முறையில் பலருக்கு யோகாசனத்தை முறையாகக் கற்றுக் கொடுத்து வருவது பெருமைக்குரியதே. இன்றும் பிரதி புதன்தோறும் தமிழர் வள ஆலோசனை மையத்தில் யோகாசனப் பயிற்சிகளால் பலர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக தற்போது நடைபெறும் யோகாசன பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

யோகாசனம் என்றால் என்ன

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ இதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வை பெறுவதற்கு நாம் சற்றேனும் சிந்திப்பதில்லை. வியாதி வந்து குணமடைவதைவிட, வியாதி வராமலேயே தடுப்பது மிகவும் உகந்தது. என்றும் நிலைபெற்ற சுகத்தைப் பற்றி நமது கவனத்தைச் செலுத்துவது மிகவும் நல்லது. வியாதி வராமல் தடுப்பதிலும், வந்த பின்னர் அறவே களைவதிலும் யோகாசனம் ஓர் உறுதியான உபாயமாகும்.

ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம் எவ்வளவு அவசியம் என்பதை இந்த உலகம் நன்கு உணர்ந்ததால் என்னவோ, இன்றைய நாள் ஜூன் மாதம் 21 ஆம் திகதி யோகாசனத்திற்கான ஒரு நாளாக உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டு வலைத்தளங்களில்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அழகிய நாளில் நோர்வே வாழ் தமிழர்களின் யோகாசனப் பயிற்சி வரலாற்றுக் கட்டுரையை தங்கள் பார்வைக்குக் கொண்டுவருவதில் தமிழர் வள ஆலோசனை மையம் பெருமை கொள்கின்றது. 

நீங்களும் தற்போது நடைபெறும் இலவச யோகாசனப் பயிற்சிகளில் சேர்ந்து ஆரோக்கிய வாழ்வைப் பெற்றுப் பயனடைய எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.